Dec 11, 2010

சப்பானால் கொல்லப்பட்ட 1.5 லட்சம் தமிழர்கள் : மறக்கப்பட்ட வரலாறு

மலேசிய எழுத்தாளர் சீ.அருண் கோவை வந்துள்ளார். தமிழோசை பதிப்பகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என சக நிருபர் ஒருவர் கூறினார். பிரபலமான சயாம் &பர்மா மரண ரயில் பாதை குறித்த புத்தகம் எழுதியவர் தான் சீ.அருண் என அறிமுகம் செய்துவைத்தார்.

‘‘சயாம்-பர்மா மரணரயில் பாதை’’ குறித்த செய்திகளை கேட்டதும், உண்மையில் அதிர்ச்சியடைந்து விட்டேன்.
1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட வரலாறு ஒரு பத்திரிக்கையாளரான எனக்கே தெரியவில்லை என்றால் அது நிச்சயம் மறக்கப்பட்ட வரலாறு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 

முதலில் என்னால் நம்ப முடியவில்லை. புத்தகத்தில் உள்ள ஆதாரங்களை பார்த்தபின்னும் கூட சிறு சந்தேகம் இருந்தது. 2 லட்சம் தமிழர்களை கொத்தடிமைகளாக பர்மாவுக்கு கொண்டுசென்றிருக்க முடியுமா? அது நடைமுறை சாத்தியமா?

இந்த சந்தேகங்களை சில வரலாற்று ஆசிரியர்கள், அந்த கால பெரியவர்கள் சிலரிடம் கேட்டேன்.

ஆம் உண்மை தான் என்ற பதில் இன்னும் என்னை திகைக்கவைத்துவிட்டது.

இன்று வெளிநாட்டுவேலை என்றால் துபாய் என்பது போல, அன்று ரங்கூன்(பர்மா) வேலை மோகம் தமிழர்கள் மத்தியில் இருந்துள்ளது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற தமிழர் தாரகமந்திரத்தின் சிவப்பு பக்கங்கள் உண்மையில் கொலை நடுங்க வைக்கிறது.

சயாம்-பர்மா மரணரயில்பாதை பணியில் பலியான சுமார் 1.5 லட்சம் தமிழர்களின் பரிதாபவரலாற்றை புத்தகமாக்கியுள்ளார் சீ.அருண்.

232 பக்கங்களுடன் கோவை தமிழோசை வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தின் சுருக்கத்தை அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன்.

தற்போது சீ. அருணுடனான சந்திப்பு :

இன்று மடிந்துகொண்டிருக்கும் தமிழர்களையே காப்பாற்ற முடியவில்லை நீங்கள் 50 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன தமிழர்களை பற்றி கவலைப்படுகிறீர்கள்

அருண் : 50 வருடங்களுக்கு முன்னர் இறந்த சுமார் 1.5 லட்சம் தமிழர்களின் மரணம் மறைக்கப்பட்டுவிடக்கூடாது. சப்பான் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் கொடுத்தது உழைப்பையும் உயிரையும். உயிருக்கு விலையில்லையென்றால் கூட பரவாயில்லை. அந்த தமிழர்களின் உழைப்பை உலகம் மறந்துவிடக்கூடாது. அதற்காக தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்.

ஈழத்தில் தமிழர்கள் இறந்ததையும், பர்மாவில் இறந்ததையும் எப்படி கருதுகிறீர்கள்?

அருண் : ஈழத்தில் தமிழர்கள் போராடி இறந்தார்கள். அது ஒரு விடுதலைபோராட்டம். விடுதலைப்போராட்ட மரணங்களை போரில் வீரமரணங்களாக கூட சீரணித்துக்கொள்ளலாம். ஆனால் சயாம்&பர்மா ரயில்பாதை பணியில் தமிழர்கள் கொத்தடிமைகளாக கொல்லப்பட்டனர். சப்பான் நாட்டுக்காக தமிழர்களின் உழைப்பும் உயிரும் எடுக்கப்பட்டது. ஈழத்தில் தமிழினம் தன் சுய விடுதலைக்காக உயிரிழந்தது. அது வீர மரணம். ஆனால் பர்மாவில் யாருக்காக 1.5 லட்சம் தமிழர்கள் உயிர் போனது? அந்த வரலாறு மறக்கப்படகூடாது.

மலேசியாவில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களா?

அருண் : மலேசியா வாழ் தமிழர்களின் மனநிலை 3 அடுக்குகளில் உள்ளது. 1 சிறப்பாக வாழ்கிறோம். 2. ஏதோ தமிழ்நாட்டைவிட பரவாயில்லை. 3. ஒரு அடிமையை போல. பொதுவாக பார்க்கும்போது மலேசியாவில் தமிழர்கள் மொழி, இனம், பொருளாதாரத்தில் இன்னும் ஒடுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என்பது தான் உண்மை.

மலேசியாவில் தமிழ்மொழி வளர்ச்சி, கல்வி எப்படி உள்ளது.

அருண் : முன்பை விட இப்போது மொழி வளர்ச்சி, கல்வி அதிகரித்துள்ளது. தமிழர்கள் மத்தியில் தாய்மொழிமீதான அக்கறை கூடியுள்ளது.

மலேசியாவில் தமிழ்வளர்ச்சிக்காக தமிழக அரசு எதாவது உதவிகள் செய்கிறதா?

அருண் : இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளவில்லை. மலேசிய தமிழர்களின் ஒருமித்த முயற்சியால் தான் தமிழ்பள்ளிகள் அதிகளவில் செயல்படுகின்றன.

தொடரும்...

3 comments:

  1. முற்றிலும் உண்மை. எனது தாத்தா இளம் வயதினில் அனுபவப்பட்டிருக்கிறார். சமீபத்திலும் கூட கூறக் கேட்டிருக்கிறேன். இரண்டாம் உலகப் போரின் போது, பல்லாயிரங்கணக்கான தமிழர்கள் இரயில் பாதையிட அப்போதைய சப்பான் இராணுவத்தினரால் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப் பட்டு, அதில் உணவின்றியும், தொற்றுநோயாலும் பலர் மாண்டனர். இன்றும் அந்த ரயில் பாதையை சியாமியர்கள் நினைவு கூர்கின்றனர். இந்திய தேசியப் படையில் பங்காற்றிய பெரும்பான்மையோர் தமிழரே. இறுதிக்கட்ட ஈழப் போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களும் தமிழரே.

    ReplyDelete
  2. உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் என்னுடைய மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள முடியுமா?

    texlords@gmail.com

    ReplyDelete
  3. நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் “சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)” ஆவணப்படம்.

    Facebook : https://www.facebook.com/Nadodigalcreations
    IMDB : http://www.imdb.com/title/tt3883834/

    ஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் :

    தமிழுலகம் அதிகம் அறிந்திடாத ஒரு துயரம் சயாம்(தாய்லாந்து) – பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர் – மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டீஷ் – ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை இலட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தொனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.

    ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 80,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

    மரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் நிறைவடந்துள்ளது.

    பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த இரயில்பாதையில் தம் அரிய பிறவியைத் தியாகம் செய்த இலட்சக்கணக்கான ஆசியத்தொழிலாளர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே அமைந்துள்ளது. இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.

    இப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை.

    SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    நன்றி.

    இப்படிக்கு,
    ராஜ்சங்கர்

    ReplyDelete

Popular Posts